Sunday, July 13, 2008

ஆக்கள் பாதுகாப்பு (கோசாலை)...



அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய புதுச்சேரி வாழ் மக்கள் பிரதிநிதிகளே!

இக்கடிதம் எழுதும் தி.ப. சாந்தசீலனாகிய நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் காந்தியடிகள் 1933 ஆம் ஆண்டே அரசியல் கட்சியிலிருந்து விலகித் தன்னைக் கட்சி சாராப் பொது மனிதராக அறிவித்தார் என்பதை நன்கு அறிந்து கொண்டவன்.


மேலும் மகாத்மா காந்திஅடிகள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ல் நடந்த தன்னுரிமைத் திருநாள் விழாக்களில் கலந்து கொள்ளாதவர். அவருடைய கருத்துக்கள் யாவும் உலக நன்மையை அடிப்படையாகக் கொண்டது. எந்தக் கட்சியையும் சார்ந்தது அல்ல என்பதை இதைப் படிக்கும் அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாய் பேரன்போடு வேண்டுகிறேன்.


இந்த மடலை எழுதும் யாமும், பசுக்கள் வயதான பிறகு அதாவது பால் கரக்கும் தன்மையை இழந்த பிறகு ஆரணி வேலூர் சி.எம்.சி மருத்துவமனை உள்ள வேலூர் நகரில், வேலூர் கோட்டைக்கு அருகில் உள்ள கோசாலையில் எமது பசுக்களைச் சேர்ப்பது வழக்கம்.


இந்த மடல் எந்த ஒரு விளம்பரச் சாதனங்களுக்கும் அனுப்பப்படுவது அல்ல. ஆனால் இதற்கு எழுத்து மூலமான பதிலை யாம் எதிர்பார்க்கிறோம்.பல்வேறு சிரமமான சூழ்நிலையிலும், நாட்டை சிறப்புடன் ஆள நினைக்கும் மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களுக்கு மீண்டும் ஒருமுறை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


காந்தியடிகளின் சிந்தனைச் சார்ந்த எமது கோசாலையைப் பற்றியக் கருத்துக்கள் பின்வருமாறு,கோசாலைப் பற்றியது :


1. கோசாலை என்பதன் பொருள் :- எருதுகளும், பசுக்களும் பால் கொடுக்கும் திறன் மற்றும் உழைக்கும் திறன் இழந்த பிறகு அதை ஓரிடத்தில் வைத்து பராமரித்து, அதாவது அதற்கு இயற்கையான மரணம் ஏற்படும் வரை அதைச் சிறந்த முறையில் அடக்கம் செய்யும் வரை பராமரிக்கும் இடத்திற்கு கோசாலை என்று பெயர்.பசு என்பது பழங்காலத்தில் "ஆக்கள்"என அழைக்கப்பட்டன.இவற்றைப் பாதுகாப்பதைப் பழந்தமிழர் உயர்வாக நினைத்தனர்.'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்' எனபது பழம் புறநானூற்று வரி.


2. கால்நடைகளுக்கான செலவு அதிகமாக இருக்கிறது. ஆனால் அவைகளால் கிடைக்கும் பலனுக்கும், அவைகளுக்காக நாம் செய்யும் செலவிற்கும், எவ்வித சம்மந்தமும் இல்லை. அதாவது அவைகளால் கிடைக்கும் பலனை விட நாம் செய்யும் செலவு மிகக் குறைவு என்பது பொருள்படும் (காந்தியடிகள் கிராம சுயராஜ்யம் பக்கம் 165.)


3. ஜீவகாருண்யம் உள்ளவர்கள் (உயிர்களிடத்தில் அன்பு) என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி. இதற்கான பதில் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரிந்ததே. அதாவது நாம் கால்நடைகளின் உயிர்களைப் பாதுகாப்பதுடன் அவைகள் நமக்கு சுமையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டு முயற்சியே இதில் பெருமளவு நமக்கு உதவமுடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். (கிராம சுயராஜ்ஜியம் காந்தியடிகள் பக் 165.)


4. கால்நடை பராமரிப்பு வி­யத்தில் தனிப்பட்ட முயற்சியானது சுயநலத்திற்கும், மிருகத்தனமான போக்கிற்கும் இடமளிக்கிறது. ஆனால் கூட்டு முயற்சியோ (மக்க¼ளா (அ) அரசாங்கமோ செய்வது) இந்த இரண்டையும் பூரணமாக ஒழிக்கவிட்டாலும் (சுய நலத்தையும் மிருகத்தனமான போக்கையும்) குறைக்கவாவது செய்யலாம். (காந்தியடிகளின்.கிராம சுயராஜ்ஜியம் பக். 167.) இவ்வாறெல்லாம் காந்தியடிகள் கால்நடை பராமரிப்பு பற்றி கூறியுள்ளார். இரத்தம் சிந்திச்சண்டை செய்து ஓய்ந்த உலகத்திற்கு சமாதானம் மற்றும் நல்லெண்ணச் செய்தியை இந்தியாவால் மட்டுமே கூறமுடியும் என்று காந்தியடிகள் கூறினார்.


ஆகவே கோசாலை அமைப்பது சப்தமில்லாத ஒரு அமைதிப் புரட்சியை நாட்டில் ஏற்படுத்திவிடும். ஆகவே கோசாலை அமைக்க அரசு உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கு எமது கருத்துகள் பின்வருமாறு:


1. நம் தமிழர்கள் உயிர்களிடத்தில் கருணை, அன்பு காட்டுவதில் உலகத்தில் உள்ள மக்களுக்கு இளைத்தவர்கள் அல்லர். ஏனென்றால் இன்னும் நமது கிராமப்புறங்களில் பலன் கொடுக்காத கால்நடைகளைக் கூட அன்றாடம் மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு போய் மாலையில் அவற்றை வீட்டுக்கு அழைத்து வந்து எல்லையற்ற அன்பை அந்த கால்நடைகளின் பேரில் செலுத்தி அன்பைப் பொழியும் இந்த மக்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு. இப்படிப்பட்ட மக்களைத் தான் காந்தியடிகளும் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் உதாரணமானவர்கள் என்று கூறினார்.


2. இம்மடலை சமர்பிக்கும் தி.ப.சாந்தசீலன் ஆகிய அடியேனுக்கும் வறுமை நிலையிலும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் இம்மக்கள் தான் கடவுளாகக் காட்சியளிக்கிறார்கள்.


3. பலன் கொடுக்காத மாடுகளை வைத்துப் பராமரிப்பவர்களின் கணக்கை இரகசியமாக எடுத்து அவர்களுக்கு அதிகப்படியான உதவித் தொகை, பரிசுத்தொகை, ஊக்கத்தொகை மாதந்தோறும் உடனடியாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.


4. தமிழ் நாட்டில் மூன்று சித்த மருத்துவக்கல்லூரிகள் அரசாங்கத்தால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தச் சித்த மருத்துவக் கல்லூரிகளை அணுகி சித்த மருத்துவத்தில் காராம் பசுவின் பால் உயர்வாகக் கூறப்படுகிறது. வெண்மைப் பசுவின் பால் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது, இரவில் சுரந்து காலையில் கறக்கும் பால் உயர்வாகக் கூறப்பட்டுகிறது. மேலும் கோரோஜனம், நெய், தயிர், பால், மோர், இவற்றின் அருமைப்பெருமைகளைப் பொது மக்கள் நடுவில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். இதனால் பால் பொருட்களின் நுகர்வுத் தன்மை அதிகப்படும். நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்த பால் பொருட்களின் நுட்பமான விசயங்கள் மக்களுக்கு புரியவரும்.


5. 100 ஏக்கருக்குக் குறையாமல் உள்ள பகுதியில் கோசாலை அமைக்கப்பட வேண்டும். கோசாலையில் கொண்டு வந்து விடப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் விரும்பினால் மாடுகளை அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். இதர கால்நடைகள் இறக்கும் போது விஞ்ஞானமுறைப்படி, தோல், எலும்பு, மற்ற பாகங்களை மீண்டும் உபயோகமான பொருட்களாக மாற்ற மிகச்சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த கால்நடைவல்லுனர்களைக் கொண்டு இந்தக் கோசாலை நிர்வகிக்கப் படவேண்டும்.


6. பொதுவாகவே பசுந்தீவனம் என்பது காணாத பொருளாகிவிட்டது. நகர்ப்புறக் கழிவுநீரைக் கொண்டு பசுந்தீவனம் வளர்க்கும் முறை மிகச்சிறப்பாக புதுச்சேரி மாநிலத்தில் விமானதளம் அருகில் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. ஆகவே புதுச்சேரி மற்ற பகுதிகளிலும் இது போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதிகப்படியான பசுந்தீவனம் உற்பத்திச் செய்யப்பட்டு மிக அதிக அளவில் கால்நடைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.


இப்படிப்பட்ட பசுந்தீவனங்கள் நம் மரபு வழியாக இருப்பது முக்கியம் . இவற்றை நம்மால் உருவாக்கப்படும் இயற்கை காடுகளில் இருந்து மட்டுமே பெற முடியும். அதாவது புல்லின் வகைகள் அருகம் புல்வகைகள் அம்மான் பச்சரிசி வகைகள் இன்னும் எண்ணற்ற விலங்கினங்கள் உண்ணும் தாவர இனங்களையே மரபு வழி பசுந்தீவனம் எனப்படும்.


7. நகர்புறத்தில் உழைக்கப் பயன்படுத்தும் மாடுகள் பொதுவாக கிராமப்புறங்களில் உழைக்கப் பயன்படுத்தும் மாடுகள் வயது முதிர்ந்து தள்ளாத நிலைமையில் இருந்தால் அவற்றை உடனடியாக கைப்பற்றி கோசாலையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட கோசாலைகள் தமிழ் நாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் பழந்தமிழ் நூல்களில் உண்டு. கோசாலைகள் அமைப்பதன் மூலம் நமது நாட்டின் பெருமை உலக அளவில் உயரும்.


மிக மோசமான சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டு ஆட்சி செய்பவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் மன நிறைவு உண்டாகும் மேலும், ஓங்கோல், மணப்பாறை, மேற்கத்தியான், காங்கேயம், தார்பக்கார், சிந்தி, போன்ற மிகச் சிறந்த இனங்கள் நமக்கு அழியாமல் தொடர்ந்து கிடைக்கும். தற்போது ஏறு தழுவுதல் விளையாட்டில் மட்டுமே இது போன்ற இனங்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. (ஜல்லிக்கட்டு) இந்த விளையாட்டை நம் புதுச்சேரி பகுதிகளிலும் ஊக்கப்படுத்த வேண்டிய ஏற்பாடுகள் செய்வதானது இப்படிப்பட்ட இனங்கள் தொடர்ந்து அழியாமல் வளர்வதற்கு ஊக்கமாய் அமையும்.


கோசாலை அமைப்பதானது வேளாண்மைக்கு மிக மிக உறுதுணையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. ஆகவே இந்த மடலில் உள்ள காரியங்களை நிறைவேற்ற வேண்டுமாய் தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


எழுத்து மூலமான பதில் அளித்தாலும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் எம்முடைய எந்தச் செய்திகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அனுப்பப்படுவதில்லை. அதிக அதிகாரம் படைத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் மட்டுமே இது அனுப்பப்படுகிறது. ஏனெனில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அனுப்புவது, பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் ஒன்றே என்று யாம் கருதுகிறோம்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இப்படிப்பட்ட கடிதங்களால் கருத்து வேறுபாடு அதிகமாகும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அதிகாரப் பகிர்வில் ஒரு சுமூகமான உறவு ஏற்பட்டு இரண்டு இயக்கங்களுக்கும் நல்ல சுமூகமாக உறவு ஏற்படும் போது இது போன்ற கடிதங்களை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் யாம் அனுப்ப முயல்வோம்.


25 வருடங்கள் தன்னலமற்ற தொண்டின் வெளிப்பாடு பல தமிழ் அறிஞர்களின் அறிவுச்சாரம் இக்கடிதத்தில் உள்ளதைத் தாங்கள் அருள் கூர்ந்து தெரிந்து கொள்ளவும். தங்களுக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இதிலுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய முயற்சி செய்தால் நாடும் தாங்களும் நல்வாழ்வு வாழ்வது உறுதி.

Friday, July 11, 2008

வேளாண்மை பற்றிய என் எண்ணங்கள்...

அடியேன் காங்கிரசில் உறுப்பினர் அல்லாத காங்கிரசுகாரன். எந்தக் கட்சியிலும் சாராதவன் காங்கிரசு கட்சி பலம் பெற்றால் இந்தியாவும், உலகeளவு பலம், வளம் பெறும். இது புதுவை மாநில நலன் கருதி எழுதப்பட்டது. இதில் உள்ள கருத்துக்கள் பலவும் இந்தியத் திருநாட்டிற்கும் பொருந்தும். எம்மைச் சோனியா தலைமையிலான காங்கிரசுகாரர்கள் பயன்படுத்தவும், செம்மைப்படுத்தவும் வேண்டுகிறேன்.

இந்த மடல் நாட்டு நலனைக் கருதி எழுதப்படுவது. இந்த மடல் எந்த ஒரு விளம்பர சாதனங்களுக்கும் அனுப்பப்படுவது அல்ல. புலன் அடக்கத்தையும் ஒழுக்கத்தையும் விரும்பி, காந்தியடிகள் 1933ஆம் ஆண்டே காங்கிரசுகட்சியில் உறுப்பினராவதை நிறுத்தித் தன்னைக் கட்சிசாரா பொதுமனிதராக அறிவித்தார். மேலும் அவர் 1947ல் நடந்த தன்னுரிமைத்திருநாளிலும் கலந்து கொள்ளாதவர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்து இந்த மடலைச் சமர்ப்பிக்கிறேன்.


காந்தி அடிகளின் வேளாண்மை சார்ந்த கருத்து :

1. நகரங்களில் உண்மை இந்தியாவைக் காணமுடியாது. இங்குள்ள எண்ணற்ற கிராமங்களில்தான் அது இருக்கிறது.


2. கிராமங்களில் இருந்துதான் நகரங்கள் பலமும் வாழ்வும் பெறுகின்றன. அந்தக் கிராமங்களைச் சுயநலத்திற்காகச் சுரண்டுவதற்கு நகரங்கள் விரும்பக் கூடாது. அதற்குப் பதிலாக, அந்தக் கிராமங்களுக்குப் போதுமான அளவுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும். அப்போது தான் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே உள்ள நல்ல தார்மீக உறவு வளரும். இந்தச் சமூகப் புணரமைப்பானது மாபெரும் பணி. (பக் 138 கிராம சுயராஜ்யம்).


3. இந்திய விவசாயியைப் பொறுத்தவரை அவர் உடம்பு கரடு, முரடானதாக இருக்கலாம் ஆனால் அதற்குள் சந்ததி சந்ததியாக வந்த ஒரு கலாச்சாரம் மறைந்திருக்கிறது. மேலே தெரியும் இந்தக் காட்டை அகற்றி விடுங்கள். அவருடைய ஏழ்மையையும் அறியாமையையும் போக்கி விடுங்கள். அப்போது கலாச்சாரம் பொருந்திய பண்பட்ட சுதந்திரமான குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த முன் உதாரணமாக அவன் திகழ்வதைக் காண்பீர்கள். (பக்152. கிராம சுயராஜ்யம். மதுரை காந்தீய இலக்கியச் சங்கம் வெளியீடு.)


4. எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால் கவர்னர்களும், மந்திரிகளும் விவசாயிகளின் மத்தியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாத நாணயமும், நாட்டுப்பற்றும் நாளுக்கு நாள் உண்டாகும். விஞ்ஞான வளர்ச்சியை நடைமுறையில் கொண்டு வரும் ஆற்றல் பெற்றிருந்தாலே போதுமானது.


5. ஒவ்வொரு கிராமங்களையும் அழகு மிக்கவை யாக்குவதே என்முதல் வேலை.


6. நீங்கள் இந்திய விவசாயிகளிடமும், அவர்கள் உங்களிடமும் பேச ஆரம்பித்தவுடன் அவர்கள் வாக்கில் விவேகம் நிறைந்திருப்பதைக் காண்பீர். வெளிக்கு அவர்கள் கரடு முரடாகத் தோன்றினாலும் உள்ளே ஆன்மீகக் களஞ்சியமாக விளங்குவதைக் காண்பீர்கள் இதைத்தான் நான் கலாச்சாரம் என்று கூறுகிறேன்.


7. இவ்வாறெல்லாம் கிராமத்தைப்பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் காந்தியடிகள் கூறி இருந்தார். ""எவ்வளவுதான் ஒருவன் சீர்கெட்டுப் போயிருந்தாலும் திறமையுடனும் மனிதாபிமானத்துடனும் முயற்சி செய்தால் அவனைத் திருத்தி விட முடியும் என நம்ப வேண்டும். மனிதர்களிடமுள்ள நல்லெண்ணத்தைத் தூண்டி அதற்குரிய பிரதிபலன் கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டும்.'' என்கிற காந்தி அடிகளின் கொள்கையில் எமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் புதுவையிலும், வேளாண்மை வெற்றி பெற, காந்தீயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட எமது கருத்துக்கள் பின்வருமாறு:


1. வேளாண்மை வளம் பெற்றால் தான் கிராமங்கள் வளம் பெறமுடியும். கிராமவளத்தில்தான் நாட்டின் வளம் உள்ளது. வேளாண்மை வளர்ந்தால்தான் நாடுவளரும், என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.


2. உழவர்களுக்கு இலவச மின்சாரம், மானியங்கள், கடன் உதவிகள், இலவச இடுபொருட்கள் எல்லாம் வழங்க வேண்டியது மிகமிக அவசியமே ஆனால் அதைவிட அத்தியாவசியம். இயற்கையாக வேளாண்மை செய்வதில் ஒரு மிகச்சிறு விவசாயி தன்னிறைவாகி இலாபம் பெற்றுத் தமது வாழ்க்கையை ஒரு நியாயமான முறையில் நடத்துவதற்கு அவர்களைத் தயார் செய்வதாகும்.


3. பண்ணை நிலம் என்றும், மருதநிலம் என்றும், வயல்வெளி என்றும் நஞ்சை நிலங்களை நம் பழந்தமிழர்கள் அழைத்து வந்தார்கள். கீழே உள்ள பாடல் கந்தர் அலங்காரம்; அருணகிரிநாதர் இயற்றியது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் என்கின்ற திருக்கோயிலைப் பற்றியப்பாடல் இது.


இந்தப் பாடல் மூலம் நெல்வயலில் மீன்கள் வளர்க்கலாம். மீன்கள் இருக்கும் நெல்வயலில் தண்ணீரும் நிறைந்து நிற்கும் என்பதை நன்கு உணரலாம்; மேலும் முருகக்கடவுள் பெருமைபற்றியும் கடப்பமலர் அருமைபற்றியும் இந்தப்பாடலால் அறியலாம்.


"சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையயழுத்தே.


மற்றும் கீழ்க் கண்ட பாடலால் மதுரைப் பகுதியில் விரிந்த பண்ணை நிலங்கள் இருந்ததையும் மதுரை மாநகரில் சிறந்த கட்டடங்கள் இருந்ததையும், கடப்பமரங்கள் அதிகம் இருந்ததையும், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்மூலம் அறியலாம். அது பின்வருமாறு :


"விண்ணொளிக்கும் சுடர்விமானமும்,பரனாத வெளியில் தாத சாந்தவீடும்கடம்பு பொதி காடும் தடம்பனைவிரிந்த தமிழ் நாடும்''.


மற்றும் நல்ல நன்செய்ய நிலம் எப்படி இருந்தது என்பதைக் கீழ்க் கண்ட கம்பராமாயணப் பாடல் மூலம் நாம் அறியலாம். இந்தப் பாடல் நஞ்சை (மருதம்) நிலம் மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் அடங்கிய நீர் நிலைகளோடு சிறப்பாக இருந்ததை விளக்கும்.


"தண்டலை மயில் களாட தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழுவின்ஏங்ககுவளைகண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டதேம்பிழி மதுரயாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ''


பொதுவாக பழந்தமிழர்கள் நெல்விளையும் நஞ்சை நிலங்களைத் தம் உயிரினும் மேலாக மதித்து வந்தனர். இதற்குக் காரணம் அதிக அளவு திண்பண்டங்களை அரிசியில் செய்யும் பழக்கம் இருந்து வந்தது. மனக்கத்தை அரிசி புட்டுக்கும், பச்சையாக சாப்பிடுவதற்கும், அதே போல் குள்ளக்கார், மோசனக்கார், பிசினிக்கார் போன்ற கார்வகை அரிசிகள், இட்லி, தோசை செய்வதற்கும், மற்றும் கார்த்திகை சம்பா, குதிரைவால் சம்பா, செங்கல்பட்டு என்ற குண்டுச் சிறுமணி போன்றவை சோறு ஆக்கவும் கஞ்சி காச்சவும், அப்ப வகைகளாகச் சமைத்து உண்பதற்கும், சீரகச் சம்பா, நெய் கிச்சடி, மிளகுச் சம்பா போன்ற வகைகள், பால்வகை அன்னங்கள் செய்வதற்குப் பயன்பட்டு வந்தன.


இப்படிப்பட்ட தானியங்களை உற்பத்தி செய்யக் கூடிய நிலங்களைத்தான் நஞ்சை நிலம் என்று கூறுவார்கள்.இந்த நஞ்சை நிலங்களில் எப்பொழுதும் தண்ணீர் நிறைந்திருக்கும். மழைக் காலங்களில் ஆறுமாதத்திற்குத் தண்ணீர் தானாகவே குளங்களில் இருந்து வெளியே வந்து பாயும். இப்படிப்பட்ட நிலங்கள் புதுவையில் நிறைந்து இருந்தன. ஆனால் தற்போது கிடையாது. இப்படிப்பட்ட நிலங்களால் புதுவை மக்கள் பசிதீர இன்பத்தோடு சோறு மணக்க மணக்க உண்டு மகிழ்ந்து வந்தார்கள். தேவைக்காகவும் வசதிக்காகவும் பண்டமாற்று முறைக்காகவும், தானியங்களை உற்பத்தி செய்தார்கள்.


நகர்ப்புறத்தில் இன்றுள்ள நிலைமைவேறு, அதாவது நகரவாசிகளில் பாதிபேர்களுக்கு மேல் பலவித நோய்க் காரணமாக அரிசி தானியத்தையே உண்ணமுடியாது.தற்போது நெல் உற்பத்தி செய்வது இலாப நோக்கத்திற்கே தவிர அதை வைத்து உண்பதற்காக அல்ல. நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி ஏரிகளைப் பராமரிப்புச் செய்யாமல், மூன்று போகமும் விளைந்த நிலங்களை ஒரு போகம் கூட விளைவிக்க முடியாத நிலங்களாக மாற்றி அதில் மூன்று போகமும் பயிர் செய்து நிலத்தையே வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இல்லாத நஞ்சை நிலங்களைக் காண்போம் என்று ஒரு பிரிவினரும், அரசு இயக்கமோ, கொஞ்சமுள்ள நஞ்சையையும் விட்டுவைக்கப் போவதில்லை என்ற போராட்டமும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆதலால் புதுச்சேரியில் உள்ள நஞ்சை நிலங்களைக் கீழ்க்கண்ட சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது எமது கருத்து.

அது பின்வருமாறு :

1. நஞ்சை நிலங்கள் ஏரித்தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வேளாண்மை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.


2. தண்ணீர் மட்டம் 50 அடிக்கு மேலே உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை ஒரு போக வேளாண்மைக்கு மட்டும் அனுமதிக்கலாம்.


3. 50 அடிக்குக் கீழே தண்ணீர் மட்டம் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை, கரும்பு, வாழை, நெல் நீங்கலாக மிகத் தண்ணீர் குறைவாகச் செலவாகும் இதர வேளாண்மைப் பயிர் செய்ய அனுமதிக்கலாம்.


4. புதுவையில் வேளாண்மை இடங்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகின்றன. வேளாண்மைத்தினக் கூலித் தொழிலாளிகளைப் பற்றி எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உண்மையில் நஞ்செய் நிலங்களுக்கு உண்மைச் சொந்தக்காரர் அவர்களே. மிகுந்த துயரத்தில் உள்ள அவர்களுக்கு வேளாண்மை இடங்கள் கைமாறும் பொழுது நிலப்பதிவின் போது நிர்ணயம் செய்த ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து உடனடியாக, சுனாமி நிவாரண நிதிபோன்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


5. தற்போது உள்e நஞ்சை நிலங்களை விட இந்தப் பூமிக்குத் தேவையானது இயற்கைக் காடுகளே. புதிய நீர் நிலைகளே; ஆதலால் விவசாயிகள் நியாயமான விரும்பும் விலையைக் கொடுத்து நகர்புறத்தைச் சுற்றியுள்ள வேளாண்மை இடங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாங்கி அவற்றில் புதிய நீர்நிலைகளை உருவாக்குவதிலும், இயற்கைகாடுகள் உருவாக்குவதிலும் மட்டுமே செய்யப்படுத்தப்பட வேண்டும்.


6. "தற்போது உள்ள நாட்டின் நிலைமைக்கு இது இன்றியமையாதது. எந்தவிதமான பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் எழுதப்படும் இந்த மடலை நன்கு அறிந்து செயல்படுத்த முயற்சிக்கவும். இந்த மடலைச் சமர்ப்பிக்கும். தி.ப. சாந்தசீலன் ஆகிய யாம் உங்கள் நண்பன், உங்கள் அன்பன் என்பதை நன்கு தெரிந்து கொள்ளவும்''.


7. உழவர்களுக்கு : உழவர்கள் என்பது சிறு விவசாயிகளைக் குறிக்கும். உழவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குரிய சந்தை விலை உலக சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். உதாரணமாக இங்கே ரூ.10/- முதல் ரூ. 20/- வரை விற்கப்படும் அரிசி வெளிநாடுகளில் ரூ.50/- முதல் ரூ.200/- வரை விற்கப்படுகிறது.


அரும்பொருட்களான அதாவது உலகமக்களுக்குத் தேவைப்படும் அறியபொருட்களான வெண்டை, புடலை, மாதுளம், இளநீர் போன்ற பொருட்கள் உலக சந்தையை விட, பத்து முதல் இருபது மடங்கு குறைவாக விற்கப்படுகின்றன. இதை மாற்றி உலகளவில் நல்லவிலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். அதே சமயத்தில் தற்போதுள்ள நிலையில் நம் நாட்டில் வேளாண்விளைப் பொருட்களின் விலை உயர்வால் உள்நாட்டு மக்கள் பாதிக்கப்படாதவாறு வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நாட்டிவ் உள்ள இதர வறியவர்களுக்கும் நுகர்வுத் தன்மை பாதிக்கப்படாத வகையில் வேண்டிய ஏற்பாடுகள் இலவச உதவிகள் மூலமோ மற்றவழி வகைகள் மூலமோ செய்யப்பட வேண்டும்.


பொதுவாக உள்நாட்டு வேளாண் உற்பத்திப் பொருட்கள் உலக சந்தையில் நல்ல அளவிற்கு விற்கப்பட்டால் ஒழிய வேளாண்மையில் வெற்றி காண்பது கடினமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னும், தற்போதும் வேளாண் விளைபொருட்களுக்கு (தக்காளி, வாழைக்காய்) சந்தை விலை மிகமிகக் குறைவாக இருந்ததால் லோடு கணக்கில் தக்காளியையும் வாழையையும் விவசாயிகள் சாலையில் வீசி விட்டுச் சென்றார்கள். கோவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொழுதும் சாலையில் வீசாமல் வயிற்றெரிச்சலோடு வேளாண்மை விற்பனைப் பொருட்களை மிகமிகக் குறைந்த விலையில், வேறுவழி இல்லாமல் விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


8. எவ்வளவு நீர்வளம் இருந்தாலும் காவிரியில் 365 நாட்களும் 24 மணிநேரமும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தாலும் எவ்வளவு உதவிகளை அரச் செய்தாலும் ஆட்சியாளர்கள் அதற்கு ஏற்பாடுகள் செய்தாலும் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய சந்தைவிலை கிடைக்கவில்லையென்றால் எல்லோருடைய முயற்சியும் பாழாகி வேளாண்மை மீள முடியாத துயரில் இருப்பது மட்டுமே மிஞ்சும்.


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கடலில் கிடைக்கும். பெரிய இறால் தற்போது விற்கப்படும் சாதாரண மீன்கள் விலையை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் தற்போது சாதாரண மீன்கள் விலையை விட மிக அதிக விலை பெரிய இறால்களுக்குக் கிடைக்கிறது.


முந்திரி விவசாயியின் நிலைமையும் இதேதான் சுமார் 40 வருடங்களுக்கு முன் முந்திரி விளைந்ததே தவிர வேளாண்மை செய்யப்படவில்லை. முந்திரி விவசாயிகள் அதை விற்பனை செய்வதற்கு வசதி படைத்தவர்களின் வீடுகளின் முன் பிச்சைக் காரர்களைப்போல யாசித்து, கெஞ்சி முந்திரிப் பயிர்களை விற்பனை செய்வார்கள். அவர்களின் நிலைமையும் மிகுந்த வறுமை நிலையில் இருக்கும்.

முந்திரியின் அருமை உலக அளவில் உணரப்பட்டு அது ஏற்றுமதி ஆன பிறகுதான் முந்திரி விளைச்சல் வேளாண்மையாக மாறி, அதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். அதே போல் வாழை, இளநீர், பனைநுங்கு, பனங்கிழங்கு, முருங்கைப்பூ, அத்திக்காய், அத்திமது, பனைமது, இவற்றின் அருமைகளை உலகளவில் உணரச் செய்து நம்நாட்டின் நாணய மதிப்பை வியக்கத்தகு வகையில் உயர்த்தலாம்.


9. நம் நாட்டிற்கு உள்ள மிக முக்கியமான பிரச்சனையே இதுதான். வேளாண்மையிலும் பால் உற்பத்தியிலும் நம் மரபுவழிப்படி வெற்றி காண்பது எப்படி என்பதைப் பற்றிய பலதுறைகளைச் சார்ந்த வல்லுநர்களை ஒன்று கூட்டி அழைத்துக் கலந்து ஆலோசனை செய்து முடிவுசெய்ய வேண்டும்.


10. கல்வி, மருத்துவம், வணிகமயமாக்கப்படாமல் சேவை அடிப்படையில் இருக்க வேண்டும். நீதி எளிய முறையில் கிடைக்க வேண்டும் இப்படி இருந்தால்தான் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கிவரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். முறையற்ற குடியிருப்புப் பகுதிகள் நகர்ப்புறங்களில் இல்லாமல் போகும். மிகச்சரியான புள்ளி விவரத்தோடு நிலங்களை ஆராய்ந்தாலும் அல்லது ஆகாய விமானத்தில் சென்று தமிழகம், புதுவை என்று பாகுபாடு இல்லாமல் பார்த்தாலும் புதுவையைச் சுற்றியுள்ள நகர்ப்புற வளர்ச்சி மிகமிகக் குறைவு என்பதும், வேளாண்மை இடங்களும் காடுகளும், ஏரிகளும் மிக, மிகஅதிகம் என்பதும் வெகுவாகப் புலப்படும்.


ஆகவே நாம் ஆற்ற வேண்டிய கடமை நிலப்பரப்பில் மிக உன்னதமானதாகும். அதாவது புதுவை மாநிலத்தை ஒட்டியது போல் உள்e நிலப்பரப்பைத் தத்து எடுத்து அல்லது புதுவையுடன் சேர்த்து (அ) நீண்டகால குத்தகை எடுத்து வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கி இர்ரி, அம்பா சமுத்திரம், ஆடுதுறை, பெரியகுளம், வேப்பங்குளம், காசரக்கோடு போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் தன்னலமற்ற சேவையை உலகத்திற்கு அர்ப்பணித்து வருவது போல் புதுவையிலும் நிகழ ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆகவே புதுவையின் அரசியல் அன்பர்கள் கிராமப்புற வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். கிராமங்களில் மிகச் சுலபமாகவும் சுகமாகவும் மக்கள் வசிக்கக் கூடிய நிலையை உருவாக்குவதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நகர்ப்புற நெரிசல் குறையும்.

மேலும் வாழை, தென்னை, பழவகைகள், தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்குத் தனித்தனியே ஆராய்ச்சி நிலையங்கள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இந்த ஆராய்ச்சி நிலையங்கள் மரபுவழி வழிமுறையை பின்பற்றி உருவாக்கப்பட வேண்டும். இத்துடன் இந்த மடலை நிறைவு செய்கிறோம்.

Thursday, July 10, 2008

என் எளிய வாழ்க்கையும் நோக்கமும்...

அன்புடையீர் ! வணக்கம். எமது பெயர் தி.ப.சாந்தசீலன்.
காந்திஅடிகள் 1933 ஆண்டே கட்சிசாரா பொது மனிதராக மாறினார் என்றும், அவர் 1947 ஆகஸ்டு 15இல் நடைபெற்ற தன்னுரிமைத் திருநாள் விழாவில் கலந்துகொள்ள வில்லை என்றும் அறிந்து அவருடைய கொள்கையை இயன்ற வழிகளில் பின்பற்றி, மக்களிடையே பரப்பி வருவது எமது வழக்கம்.

ஒரு நாட்டுக்குரிய மொழி வளர்ந்தால்தான் அந்த நாடு வளரும் என்ற காந்தியக்கொள்கையை நன்கு தெரிந்து தமிழையும், தமிழிசையையும் வளர்த்து வருவது எமது வழக்கம்.

கீழ்கண்ட நாட்டுப் பணிகளுக்குத் தங்கள் ஆதரவுடனும், ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் செய்ய விரும்புகிறேன். அவை பின்வருமாறு :

1. தமிழ்மொழி வeர்ச்சியிலும், தமிழிசையிலும் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும், தனிநபர்களுக்கும், உதவி செய்வது.

2. வழிபாட்டுத் தளங்களில் ( கோயில்களில் ) அரசு, வேம்பு, மலைவேம்பு, இலந்தை, எட்டி, அத்தி, மகுடம், வில்வம், விளா, இளுப்பை, நாவல், கொன்றை, வன்னி, பின்னை போன்ற மரபுவழி மரங்களை முற்றிலும் எமது செலவில் கூண்டு அமைந்து நடவு செய்து கொடுப்பது.

3. பனைமரம், தென்னைமரம், முருங்கைமரம், வேப்பமரம் இந்த ஐந்து மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களின் உயர்ந்த தரத்தை தமிழகத்தை உணரச்செய்து உலகளவில் அதை விற்பனை செய்து மானத்தோடும், கவுரவத்தோடும், உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவர்களை வறுமையில் இருந்து மீட்பது.

4. சிலம்பு விளையாட்டுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது.

5. பம்பை, உடுக்கை வாசிப்பதில் தேர்ந்த கலைஞர்களுக்குப் போட்டி நடத்தி அவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பது.

6. இசை இசைத்துக்கொண்டே நடவு நடும்போட்டி நடத்தி வேளாண்மை தொழிலாளர்களுக்குப் பரிசளிப்பது. இது தொடர்பாக யாம் புதுவைப் பகுதியில் நடத்திய போட்டி பற்றி இந்து எழுதியுள்ளது.

7. சடுகுடு விளையாட்டுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தல்.

மேன்மை தாங்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள் எமக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் எம்மைத் தொலைபேசியிலும், நேரிலும் அணுகலாம்.

தங்கள் பகுதிக்கு அழைத்தாலும் நான் வருவேன்.

அன்புடன்
தி.ப.சாந்தசீலன்
22, உடையார் தெரு,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி - 605 008.
பேசி: 0143 - 2251370 0143 - 49518

""பிறந்த நாடே சிறந்த கோயில்!
பேசும் மொழியே தெய்வம்''"

"நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை'' (ஒளவைப் பிராட்டி)

ஏரிகள் பாதுகாப்பு பற்றிய என் எண்ணங்கள்...

உலகின் முன்னேறவேண்டிய நாடுகள் உணரவேண்டிய புதுவையின் நீராதாரம். புதுவையின் மொத்த பரப்பeவு 432 ச.கி.மீட்டரில் 83 ஏரிகள் இருப்பது இந்தியாவிலேயே புதுவையில்தான்.

கிராம பஞ்சாயத்துகள் புதுவை பிரஞ்சு ஆட்சிக் காலத்தில் உயிரோட்டமாக இருந்ததினால்தான் ஏரிகள் மேம்படுத்தப்பட்டன. செம்மைப்படுத்தப்பட்டன. அவை சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இவ்வளவு குறைந்த பரப்பeவில் இவ்வளவு அதிகமான ஏரிகள் இருந்தும் கூட நம் அரசாங்கம் ஆட்சி, மக்கள் இந்த மூன்று இயக்கங்களும் செய்யும் தவறினால் புதுவையில் நிலத்தடி நீர் மாசுபட தொடங்கியிருக்கிறது. கடல் நீர் உள்ளே வர தொடங்கியிருக்கிறது.

கீழ்க்கண்ட காரியங்களை அதனால் புதுவை மாநிலத்தில் உடனே செய்ய வேண்டும்.

1. தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15,72,273 பேர். மொத்தப் பரப்பளவு 4.59,054 ஹெக்டர். புதுவையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பரப்பளவில் புதுவையை விட பல மடங்கு தூத்துக்குடி மாவட்டம் அதிகம். கட்டடங்கள் குறைவு கடலோர மணற்பரப்பு அதிகம் புதுவையை விட மக்கள் நெருக்கம் குறைவு ஆனால் சுமார் கடற்கரையிலிருந்து 10 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வெகுவாக நிலத்தடி நீரில் கலந்துள்ளது. வேளாண்மை செய்ய 30 அடிக்கு கீழ் உப்பு நீர்தான் கிடைக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் போதுமான நீர் நிலைகள் இல்லாதது தான். இதை மக்கள் பிரதிநிதிகள், அரசாங்கம் உணரவேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரிடமிருந்து எமக்கு வந்த கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்eது.

2. புதுவையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இல்லங்கள் அமைத்து அதில் சிறிய ஆழ்குழாய் அமைத்து சுத்தக் குடிநீரை பருகி இன்பமாய் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். சுமார் 65,00,000 மக்கள் வாழும் சென்னையில் புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் மக்கள் அங்கு வாழவே முடியாது என்ற மிகக் கொடூரமான, கேடுகெட்ட நிலமை உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு முக்கிய காரணம் என்ன ? சுமார் 1,600 சதுர கிலோ மீட்டர் உள்ள சென்னையில் ஏரிகளின் எண்ணிக்கை 5 முதல் 10 வரை இருக்கும். எமக்கு சரியாக புள்ளி விபரம் தெரியாது என்றாலும் சற்று ஏறக்குறைய நிலமை இதுதான்.

3. இந்த கருத்துக்களையெல்லாம் மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உணரவேண்டும். ""தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் சிந்தும் தேசம்''. ""தண்ணீர் மாசுபட்டால் காசுயிருந்தும் பயனில்லை.'' எப்பேர்பட்ட முயற்சி செய்தாகிலும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பைத் தடுப்போம் என்று பொதுமக்களுக்கு எழுதி வைத்திருக்கும் அரசுபல நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு அரசாங்கமே மூலகாரணமாகயிருக்கிறது. அதுவே ஆக்கிரமித்தும் உள்ளது. இன்று வரை புதுவையிலுள்ள90 சதவிகித ஏரிகளில் ஒன்று கூட சரிவர நிர்வாகம் செய்யப்படவில்லை. செப்பணிடப்படவில்லை. மேம்படுத்தப்படவில்லை.

4. இடம், பொருள், ஏவல், கூட்டுறவு, நட்பு, அனுபவம் என்ற தத்துவத்தின் கீழ் நம் முன்னோர்கள் மழைக்காலங்களில் நீரோட்டங்களை அறிந்தும். வெள்ளப்போக்கை அறிந்தும் மிக அருமையாக பல உன்னதமான ஏரிகளைஉருவாக்கினார்கள் பல குளங்களையும், குட்டைகளையும், தாங்கல்களையும், மடுவுகளையும் அற்புதமாக உருவாக்கியிருந்தார்கள்.

அதேபோல் நாமும் செயற்கைக்கோள் உதவியுடன், ஆகாயவிமான உதவியுடன், நவீன கேமராக்கள் உதவியுடன் மழைக்காலங்களில், வெள்ளக்காலங்களில் நீர்நிலைகளின் போக்கை அறிந்து எந்தெந்த இடங்களில் எல்லாம் புதிய நீர்நிலைகளை ஒரு சிலவற்றையாவது உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் தற்போது உள்ள நீர் நிலைகளை சிறந்த முறையில் நிர்வகித்து மேம்படுத்து ஆற்றல் நமக்கு உண்டாகும்.

5. தற்போது நாம் என்ன செய்கிறோம் என்றால் ஏரியை தூர் வார மட்டும் தெரிகிறது. எப்படி தூர் வார வேண்டும். எங்கு தூர் வார வேண்டும். எவ்வeவு ஆழத்தில் தூர் வார வேண்டும் அதில் மழைநீர் சேகரிப்பை எப்படி அமைக்க வேண்டும் என்பது தெரியவில்லை. நீர்வரத்து கால்வாய்களையும் ஒழுங்காக சீரமைக்கவும் தெரியவில்லை.

உதாரணமாக ஊசுட்டேரியில் நடக்கும் மிக மோசமான நிர்வாகப்பணிகளை இங்கே குறிப்பிடுகிறோம். சுமார் 15 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஊசுட்டேரியில் ஒழுங்காகத் துர்வாரப்படவில்லை ஊசுட்டேரி கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ள வெள்ளேரி, கடப்பேரி போன்றவைகளும் இது வரை செப்பனிடப்படவில்லை. ஊசுட்டேரியின் எல்லா மதகுகளும் நீர் ஒழுக்கு உடையவை இதுவரை நவீன திறப்பான்கள் பொருத்தப்படவேயில்லை. ஊசுட்டேரியில் தமிழகப்பகுதியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. அதை தடுக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊசுட்டேரி நீர் வரத்து கால்வாய்கள் மட்டம் பார்த்து தூர் வாரப்படுவதில்லை. ஒரு இடத்தில் உயரமாகவும் தூர் வாரப்படுகிறது. 63 ஏரிகள் இணைப்பு கொண்டது சங்கராபரணியாறு, மேல்மலையனூர் ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் மூலம் தான் ஊசுட்டேரி மற்ற ஏரிகளுக்குத் தண்ணீர் வருகிறது.

இந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் 60 வருடமாக அப்படியே இருக்கிறது. இது வரை அது உயரப்படுத்தப்படவில்லை. ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்eன. மழைக்காலங்களில் ஏரிக்கு அதிகப்படியான நீர் வரும்போது கூனிமுடக்குப் பகுதியில் கால்வாயில் தண்ணீர் வழிவதையும், காட்டேரிக்குப்பம் பகுதியில் கால்வாயில் ஆழத்தில் தண்ணீர் வருவதையும் இப்புகைப்படத்தில் நன்கு அறியலாம். இதன் மூலம் நீர்வரத்து வாய்கால் சரியான முறையில் தூர் வாரப்படவில்லை என்பதை நன்கு அறியலாம்.

இந்த ஒரு ஏரியிலேயே இவ்வளவு குறைபாடுகள் இருந்தால் மற்ற ஏரிகளில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இதை மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்கமும் நன்கு உணரவேண்டும்.

6. புதுவையில் எல்லா ஏரிகளையும் அளந்து அளவைக்கல் சுற்றிலும் நடவேண்டும். சிறிய குளங்கள், மடுவுகளைச் சுற்றி கருங்கல்லால் ஆன கரை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். கழிவு நீர் நீர்நிலைகளில் கலக்காமல் கடல் வரை செல்ல பிரத்தியோக ஏற்பாடு செய்யவேண்டும்.

7. கிராம பஞ்சாயத்துக்களுடன் இணைந்து அரசு, ஆட்சியாளர்கள் செயல்பட்டால் தான் முழு வெற்றியுடன் நீர் நிலைகளை நிர்வகிக்க முடியும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். புதுவையில் நீர் நிலைகளை அழியாமல் பாதுகாத்து கொடுத்ததே கிராம பஞ்சாயத்துகள்தான். அந்த கிராம பஞ்சாயத்துக்களை நாம் உதாசினப்படுத்துகிறோம். அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க மறுக்கிறோம். கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் கொடுத்தால்தான் மக்கள் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., மந்திரிகள். அரசாங்கம் முழு வெற்றியுடன் செயல்பட முடியும்.

இதற்கு உதாரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆட்சி முறைகளை நாம் நன்கு அறிய வேண்டும். இப்போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் கொடுத்தால் எம்.எல்.ஏ., மந்திரிகள், அரசாங்கத்திற்கு அதிகாரம் குறைந்துவிடும் என்று முற்றிலும் தவறாக நினைக்கிறார்கள்.

8. 10 பேருக்கு குறையாத தூதுக்குழு ஒன்றை அனுப்பி நல்ல முறையில் ஏரிகளை நீர்நிலை நிர்வாகிக்கும், அமெரிக்கா, பின்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, உட்பட 10 நாடுகளுக்கு குறையாமல் அங்குள்ள நவீன நீர்நிலை நிர்வாகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உலகத்திற்கே முன் உதாரணமான கல்லணை நீர் நிர்வாகத்தைப் பற்றியும் புதுவை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

புதுவை அரசு பெரும்பாலான கடிதங்களை ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்திலேயே தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதை தமிழில் அனுப்ப ஏற்பாடு செய்தால் தான் கிராம பஞ்சாயத்துக்கள் உயிரோட்டமுள்ள ஒரு ஜீவனாக மாறும். நிற்க.

9. இந்தக் கடிதங்களில் உள்ள பல கருத்துக்கள் தமிழகப் பகுதிக்கு பொருந்தும். அதனால் தமிழக அரசுக்கும், தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. எந்த பத்திரிக்கைகளுக்கோ, நாளிதழ்களுக்கோ இது அனுப்பப்படுவதில்லை.
அன்புடன் தி.ப.சாந்தசீலன் 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008.






இணைப்பு :
அனுப்புநர் : பெறுநர் திரு.எஸ். தர்மலிங்கம், எம்.ஏ.,
புள்ளி இயல் உதவி இயக்குநர் ( முகூபொ ) , தூத்துக்குடி மாவட்டம்.

கடித எண் : 621 / அ2 / 2007 - 1 நாள் : 27.09.2007 ஐயா, பொருள் : தகவல் உரிமைச் சட்டம் விவரங்கள் கேட்பது தொடர்பாக பார்வை : 1. தங்களது மனு நாள் இல்லை. 2. மாவட்ட ஆட்சி தலைவர் தூத்துக்குடி கடிதஎண் : ஓ.மு.எல் 01/71700/2007 நாள் : 14.09.2007 தங்களது மனுவில் கோரியுள்ள விவரங்களில் இவ்வலுவலகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கான 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்களைக் கீழ்க்கண்டுள்ளவாறு தெரிவித்துக் கொள்கிறேன். மொத்த மக்கள் தொகை - 1572273 இதில் ஆண்கள் - 766823, பெண்கள் - 805450 மொத்த பரப்பளவு - 459054 ஹெக்டேர். மேலும் தங்களது விண்ணப்பத்தில் கோரியுள்ள இதர விவரங்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.புள்ளி இயல் உதவி இயக்குநர் ( முகூபொ)தூத்துக்குடிநகல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாeர் ( பொது )தூத்துக்குடி.

வளர்க வையகம் ! வாழ்க தமிழ் !!
"பிறந்த நாடே சிறந்த கோயில்! பேசும் மொழியே தெய்வம்''

Tuesday, July 8, 2008

உருகும் மெழுகுகள்

மொழி வளர்வது, நீதி கிடைப்பது பற்றியது. இக்கடிதத்தை சமர்பிக்கும் எனதுபெயர் தி.ப. சாந்தசீலன், எம்மை காலை 9.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தொலைபேசியிலும்,நேரிலும் சந்திக்கலாம். எண்.22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008. என்ற விலாசத்தில் வழி, வழியாக யாம் வசித்து வருகிறோம்.

மது அருந்தாமை யோகாவை வளர்ப்பது, தமிழையும், தமிழிசையையும், மரபுவழி மரங்களையும் வளர்ப்பது எமது வழக்கம். காந்தியடிகள் 1933ஆம் ஆண்டே கட்சியிலிருந்து விலகி தன்னைக் கட்சி சாரா பொதுமனிதராக அறிவித்தார் என்பதையும் 1947ஆம் ஆண்டு நடந்த சுதந்திர வைபோகங்களில் கலந்து கொள்ளாதவர் என்பதையும் அறிந்தபின், உலகத்திற்கும், தமிழ் மண்ணுக்கும் தேவைப்படும் அவரது கருத்துக்களை மக்களிடையே பரப்புவதும் எமது வழக்கம்.

காந்தியடிகள் கூறினார் அப்பழுக்கற்ற ஜனநாயக நாட்டில் குற்றம் குறையற்ற நீதி அனைவருக்கும் சுலபமாக எளிதில் கிடைக்க வேண்டும். மேலும் அவர் தெளிவாக மக்களுக்கு விளக்கினார். கடந்த 50 வருடமாக நாம் நமது தாய்மொழியில் கல்வி கற்றிருப்போமேயானால் நமது அறிவினால் அண்டை அயலில் உள்eவர்கள் பயன் அடைந்து இருப்பார்கள், இந்தியாவும் தனது தேவைக்கேற்ற ஒரு சுய ஆட்சியை அனுபவித்துக்கொண்டிருக்கும். நம் நாட்டிலும் பலவிஞ்ஞானிகள் தோன்றி இருப்பார்கள். அவர்களது கண்டுபிடிப்பு நமது சொத்தாகி இருக்கும். கிராம பஞ்சாயத்துக்கள் விசே­ உயிருள்ள ஜீவனாகியிருக்கும். இந்த புனித பூமியில் திட்டமிட்டப் படுகொலைகள் நடக்காது இருந்து இருக்கும்.

பொதுவாக உருக்கமாக நாம் அறியவேண்டியது இது தான் அதாவது, தாய்மொழிக் கல்வி இல்லாததினால்தான் மனிதர்களுக்கு அறிவு குறைவு ஏற்பட்டுள்eது. ஆதலால்தான் மிகமிக மோசமான நிலையில் உள்ள நீதிக்கிடைக்காத சூழ்நிலையை எதிர்த்து அறப்போராட்டத்தில் கூட மக்கள் இறங்கவில்லை. இதனால் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

விரைவு நீதிமன்ற நீதிபதிகளாக பொதுமக்கள் பலர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு நம் சமுதாயம் சூட்டும் பெயர் ரவுடி, குண்டர், பிஸ்தா, போன்றவை. திருக்குறளில் உள்ள குறள் அதாவது, ""அறம் ஈனும், இன்பமும் ஈனும் - திறனறிந்து பிறர் தீதின்றிவந்த பொருள்''இக்குறளின் பொருள் பிறரைக் கெடுக்காமல் உழைப்பின்மூலம் வரக்கூடிய செல்வம்தான் நன்மையைத் தரும் என்பதாகும்.

காந்தியடிகளும் நாணயமில்லாத செல்வம் நாட்டிற்கே ஆபத்தையே விçeவிக்கும் என்று கூறினார். கொலை, கொள்ளை குற்றங்களைத் தவிர இதர வழக்குகளுக்காக காவல் துறையையோ, நீதித்துறையையோ மக்கள் அணுகும்போது வெளிப்படையாகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுசம்மந்தமாக (மிகு விரைவு நீதிமன்ற நீதிபதிகள்) ரவுடி, குண்டர்களை அணுகுங்கள் எங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்குச் சென்றால் பத்துவருடங்களாக ஆனாலும் நீதிகிடைக்காது.

இந்த நாட்டில் என்று வெளிப்படையாக சொல்லிவிடுவது மிகுந்த வழக்கமாக உள்ளது. இது ஊர் அறிந்த ரகசியமாகவும் உள்eது.மேற்படி குண்டர்கள் இதுபோன்ற வழக்குகளைத் தீர்க்க முற்படும்போது அவர்களுக்கு உழைப்பில்லாத செல்வம் பிறரைக்கெடுத்து வரக்கூடிய செல்வம் சுலபமாக அதிக அளவில் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடுகிறது. காந்தியடிகளும், வள்ளுவரும் குறிப்பிட்டதுபோல இந்த செல்வம் அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அழிக்கிறது. அவர்கள் மக்களுக்குச் செய்யும் நன்மை ஏராeம். பல குண்டர்களின் இல்லங்களின் சுப நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நன்றி விசுவாசத்தோடு மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொள்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

தங்கள் வாழ்வை அழிய விடச்செய்து கொண்டே நூற்றுக்கு தொண்ணூற் றைந்து சதவிகித குண்டர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றுகிறார்கள். ஆகவே இவர்கள் உருகும் மெழுகுகள். இவர்களுக்கு அடுத்தப்படியாக இருப்பவர்கள் இவர்களைக் கண்காணிக்கும் காவல்துறையினர் இவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றுதலில் முற்றிலும் வழிகாட்டுதல், இல்லாமை, தாங்கள் எடுத்துக்கொண்டவேலையில் உள்ள செயல்களைப் பாராமல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் கட்டுப்பாடின்மை போன்றவை இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இயற்கையாக வரும்.

ஆகவே இதுபோன்ற செயல் சூழலில் மீள முடியாமல் இவர்கள் உடலும், உள்ளமும் கெட்டு, குண்டர்கள் ஒரு மணிநேரத்தில் எரிந்து உருகுகிறார்கள் என்றால் இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள காவல் துறையில் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் இரண்டு மணிநேரத்தில் எரிந்து உருகுகிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக உள்ள அரசியல் தலைவர்கள் மூன்று மணி நேரத்தில் எரிந்து உருகுகிறார்கள். அதாவது வலுக்கட்டாயமாக சமுதாயத்தால் தீய சூழலில் ஈடுபடும் இவர்கeது வாழ்க்கை இவர்கள் ஏற்றுச்செய்யும் வேலையில் ஏற்படும் குற்றஅளவுகளுக்கு ஏற்ப இவர்களின் வாழ்வில் மிகுந்த தீமை ஏற்படுகிறது. இதுதான் எதார்த்தமான உண்மை.

இதற்கு தீர்வுதான் என்ன?
இதனுடைய தீர்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்குமுன் நாட்டில் இதன் பிரதிபலிப்பு என்ன? வறுமையையும் அறியாமையையும் முதலீடாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இவர்களின் இந்த நிலையால் அரசு இயந்திரங்களில் ஊடுருவியாய்ந்திருக்கும் இலஞ்சம், ஊழல், இதனால் நம் தமிழ்மண் உட்பட இந்தியா முழுவதுமே மீள முடியாத துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படி கூறுவதால் நாட்டில் நல்லவர்கள் இல்லை, நல்ல சக்தி இல்லை என்பது பொருளல்ல. நல்லவர்களும், நல்ல சக்திகளும் நடைமுறை நாட்டுநிர்வாகத்தில் வரமுடியாத சூழ்நிலை இருக்கிறது என்பது தான் பொருள்.

இதற்குத் தீர்வு தமிழ்மண்ணில் தமிழும் தெலுங்குமண்ணில் தெலுங்கும், அந்தந்த மாநிலத்திற்கு உரியமொழிகள் வளரவேண்டும். நீதி மிகவிரைவாக கிடைக்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது சம்மந்தமாக ஆலோசனை செய்ய வேண்டும். இதற்கு தீர்வு காண வேண்டும். இதுதான் இதற்கு சிறந்த நிரந்தர தீர்வு.

இல்லையயன்றால் மனுநீதி சோழனும், பாண்டிய மன்னன், பாண்டிய நெடுஞ்செழியனும் வாழ்ந்து நீதிக்கு புகழ் பெற்ற நம் தமிழ்நாட்டில் உள்e அனைவரும் வெட்கத்தோடு, வேதனையோடு ஒருபொய்யான வாழ்க்கையை வாழநேரிடும், நேரிட்டுக்கொண்டும் இருக்கிறது. ""நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை"' என்ற ஒeவைப்பிராட்டியின் கருத்துகூர்ந்து நோக்கத்தக்கது. அதுமட்டுமல்ல திட்டமிடப்படாத அரசனுடைய ஆட்சியில் பொருளில்லாத வறுமை நிலையும், துன்பமானதாகும். செல்வ நிலையும் அதைவிட துன்பமானதாகும்.

"இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின்'' என்ற திருக்குறளின்படி நம் தமிழ் மண்ணில் உள்ள அனைவரது வாழ்வும் துன்பநிலையையே உணர்த்திக்கொண்டு இருக்கும். எனவே தமிழை வeர்ப்போம், தரணியில் உயர்வோம். விரைவான நீதியை பெறுவோம், இன்பவாழ்வு வாழ்வோம்.

இந்தக் கடிதத்தை படிக்கும் அன்பர்கள், இதற்கு எழுத்து மூலமான பதிலை எமக்கு அனுப்பினால் உற்சாகமும், மகிழ்ச்சியும் உடையவனராவோம்.
நன்றி
அன்புடன் தி.ப. சாந்தசீலன்
குறிப்பு : இந்தக் கடிதம் எந்த நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி, விளம்பர சாதனங்களுக்கும் அனுப்பப்படுவதில்லை.