Friday, July 11, 2008

வேளாண்மை பற்றிய என் எண்ணங்கள்...

அடியேன் காங்கிரசில் உறுப்பினர் அல்லாத காங்கிரசுகாரன். எந்தக் கட்சியிலும் சாராதவன் காங்கிரசு கட்சி பலம் பெற்றால் இந்தியாவும், உலகeளவு பலம், வளம் பெறும். இது புதுவை மாநில நலன் கருதி எழுதப்பட்டது. இதில் உள்ள கருத்துக்கள் பலவும் இந்தியத் திருநாட்டிற்கும் பொருந்தும். எம்மைச் சோனியா தலைமையிலான காங்கிரசுகாரர்கள் பயன்படுத்தவும், செம்மைப்படுத்தவும் வேண்டுகிறேன்.

இந்த மடல் நாட்டு நலனைக் கருதி எழுதப்படுவது. இந்த மடல் எந்த ஒரு விளம்பர சாதனங்களுக்கும் அனுப்பப்படுவது அல்ல. புலன் அடக்கத்தையும் ஒழுக்கத்தையும் விரும்பி, காந்தியடிகள் 1933ஆம் ஆண்டே காங்கிரசுகட்சியில் உறுப்பினராவதை நிறுத்தித் தன்னைக் கட்சிசாரா பொதுமனிதராக அறிவித்தார். மேலும் அவர் 1947ல் நடந்த தன்னுரிமைத்திருநாளிலும் கலந்து கொள்ளாதவர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்து இந்த மடலைச் சமர்ப்பிக்கிறேன்.


காந்தி அடிகளின் வேளாண்மை சார்ந்த கருத்து :

1. நகரங்களில் உண்மை இந்தியாவைக் காணமுடியாது. இங்குள்ள எண்ணற்ற கிராமங்களில்தான் அது இருக்கிறது.


2. கிராமங்களில் இருந்துதான் நகரங்கள் பலமும் வாழ்வும் பெறுகின்றன. அந்தக் கிராமங்களைச் சுயநலத்திற்காகச் சுரண்டுவதற்கு நகரங்கள் விரும்பக் கூடாது. அதற்குப் பதிலாக, அந்தக் கிராமங்களுக்குப் போதுமான அளவுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும். அப்போது தான் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே உள்ள நல்ல தார்மீக உறவு வளரும். இந்தச் சமூகப் புணரமைப்பானது மாபெரும் பணி. (பக் 138 கிராம சுயராஜ்யம்).


3. இந்திய விவசாயியைப் பொறுத்தவரை அவர் உடம்பு கரடு, முரடானதாக இருக்கலாம் ஆனால் அதற்குள் சந்ததி சந்ததியாக வந்த ஒரு கலாச்சாரம் மறைந்திருக்கிறது. மேலே தெரியும் இந்தக் காட்டை அகற்றி விடுங்கள். அவருடைய ஏழ்மையையும் அறியாமையையும் போக்கி விடுங்கள். அப்போது கலாச்சாரம் பொருந்திய பண்பட்ட சுதந்திரமான குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த முன் உதாரணமாக அவன் திகழ்வதைக் காண்பீர்கள். (பக்152. கிராம சுயராஜ்யம். மதுரை காந்தீய இலக்கியச் சங்கம் வெளியீடு.)


4. எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால் கவர்னர்களும், மந்திரிகளும் விவசாயிகளின் மத்தியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாத நாணயமும், நாட்டுப்பற்றும் நாளுக்கு நாள் உண்டாகும். விஞ்ஞான வளர்ச்சியை நடைமுறையில் கொண்டு வரும் ஆற்றல் பெற்றிருந்தாலே போதுமானது.


5. ஒவ்வொரு கிராமங்களையும் அழகு மிக்கவை யாக்குவதே என்முதல் வேலை.


6. நீங்கள் இந்திய விவசாயிகளிடமும், அவர்கள் உங்களிடமும் பேச ஆரம்பித்தவுடன் அவர்கள் வாக்கில் விவேகம் நிறைந்திருப்பதைக் காண்பீர். வெளிக்கு அவர்கள் கரடு முரடாகத் தோன்றினாலும் உள்ளே ஆன்மீகக் களஞ்சியமாக விளங்குவதைக் காண்பீர்கள் இதைத்தான் நான் கலாச்சாரம் என்று கூறுகிறேன்.


7. இவ்வாறெல்லாம் கிராமத்தைப்பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் காந்தியடிகள் கூறி இருந்தார். ""எவ்வளவுதான் ஒருவன் சீர்கெட்டுப் போயிருந்தாலும் திறமையுடனும் மனிதாபிமானத்துடனும் முயற்சி செய்தால் அவனைத் திருத்தி விட முடியும் என நம்ப வேண்டும். மனிதர்களிடமுள்ள நல்லெண்ணத்தைத் தூண்டி அதற்குரிய பிரதிபலன் கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டும்.'' என்கிற காந்தி அடிகளின் கொள்கையில் எமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் புதுவையிலும், வேளாண்மை வெற்றி பெற, காந்தீயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட எமது கருத்துக்கள் பின்வருமாறு:


1. வேளாண்மை வளம் பெற்றால் தான் கிராமங்கள் வளம் பெறமுடியும். கிராமவளத்தில்தான் நாட்டின் வளம் உள்ளது. வேளாண்மை வளர்ந்தால்தான் நாடுவளரும், என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.


2. உழவர்களுக்கு இலவச மின்சாரம், மானியங்கள், கடன் உதவிகள், இலவச இடுபொருட்கள் எல்லாம் வழங்க வேண்டியது மிகமிக அவசியமே ஆனால் அதைவிட அத்தியாவசியம். இயற்கையாக வேளாண்மை செய்வதில் ஒரு மிகச்சிறு விவசாயி தன்னிறைவாகி இலாபம் பெற்றுத் தமது வாழ்க்கையை ஒரு நியாயமான முறையில் நடத்துவதற்கு அவர்களைத் தயார் செய்வதாகும்.


3. பண்ணை நிலம் என்றும், மருதநிலம் என்றும், வயல்வெளி என்றும் நஞ்சை நிலங்களை நம் பழந்தமிழர்கள் அழைத்து வந்தார்கள். கீழே உள்ள பாடல் கந்தர் அலங்காரம்; அருணகிரிநாதர் இயற்றியது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் என்கின்ற திருக்கோயிலைப் பற்றியப்பாடல் இது.


இந்தப் பாடல் மூலம் நெல்வயலில் மீன்கள் வளர்க்கலாம். மீன்கள் இருக்கும் நெல்வயலில் தண்ணீரும் நிறைந்து நிற்கும் என்பதை நன்கு உணரலாம்; மேலும் முருகக்கடவுள் பெருமைபற்றியும் கடப்பமலர் அருமைபற்றியும் இந்தப்பாடலால் அறியலாம்.


"சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையயழுத்தே.


மற்றும் கீழ்க் கண்ட பாடலால் மதுரைப் பகுதியில் விரிந்த பண்ணை நிலங்கள் இருந்ததையும் மதுரை மாநகரில் சிறந்த கட்டடங்கள் இருந்ததையும், கடப்பமரங்கள் அதிகம் இருந்ததையும், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்மூலம் அறியலாம். அது பின்வருமாறு :


"விண்ணொளிக்கும் சுடர்விமானமும்,பரனாத வெளியில் தாத சாந்தவீடும்கடம்பு பொதி காடும் தடம்பனைவிரிந்த தமிழ் நாடும்''.


மற்றும் நல்ல நன்செய்ய நிலம் எப்படி இருந்தது என்பதைக் கீழ்க் கண்ட கம்பராமாயணப் பாடல் மூலம் நாம் அறியலாம். இந்தப் பாடல் நஞ்சை (மருதம்) நிலம் மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் அடங்கிய நீர் நிலைகளோடு சிறப்பாக இருந்ததை விளக்கும்.


"தண்டலை மயில் களாட தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழுவின்ஏங்ககுவளைகண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டதேம்பிழி மதுரயாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ''


பொதுவாக பழந்தமிழர்கள் நெல்விளையும் நஞ்சை நிலங்களைத் தம் உயிரினும் மேலாக மதித்து வந்தனர். இதற்குக் காரணம் அதிக அளவு திண்பண்டங்களை அரிசியில் செய்யும் பழக்கம் இருந்து வந்தது. மனக்கத்தை அரிசி புட்டுக்கும், பச்சையாக சாப்பிடுவதற்கும், அதே போல் குள்ளக்கார், மோசனக்கார், பிசினிக்கார் போன்ற கார்வகை அரிசிகள், இட்லி, தோசை செய்வதற்கும், மற்றும் கார்த்திகை சம்பா, குதிரைவால் சம்பா, செங்கல்பட்டு என்ற குண்டுச் சிறுமணி போன்றவை சோறு ஆக்கவும் கஞ்சி காச்சவும், அப்ப வகைகளாகச் சமைத்து உண்பதற்கும், சீரகச் சம்பா, நெய் கிச்சடி, மிளகுச் சம்பா போன்ற வகைகள், பால்வகை அன்னங்கள் செய்வதற்குப் பயன்பட்டு வந்தன.


இப்படிப்பட்ட தானியங்களை உற்பத்தி செய்யக் கூடிய நிலங்களைத்தான் நஞ்சை நிலம் என்று கூறுவார்கள்.இந்த நஞ்சை நிலங்களில் எப்பொழுதும் தண்ணீர் நிறைந்திருக்கும். மழைக் காலங்களில் ஆறுமாதத்திற்குத் தண்ணீர் தானாகவே குளங்களில் இருந்து வெளியே வந்து பாயும். இப்படிப்பட்ட நிலங்கள் புதுவையில் நிறைந்து இருந்தன. ஆனால் தற்போது கிடையாது. இப்படிப்பட்ட நிலங்களால் புதுவை மக்கள் பசிதீர இன்பத்தோடு சோறு மணக்க மணக்க உண்டு மகிழ்ந்து வந்தார்கள். தேவைக்காகவும் வசதிக்காகவும் பண்டமாற்று முறைக்காகவும், தானியங்களை உற்பத்தி செய்தார்கள்.


நகர்ப்புறத்தில் இன்றுள்ள நிலைமைவேறு, அதாவது நகரவாசிகளில் பாதிபேர்களுக்கு மேல் பலவித நோய்க் காரணமாக அரிசி தானியத்தையே உண்ணமுடியாது.தற்போது நெல் உற்பத்தி செய்வது இலாப நோக்கத்திற்கே தவிர அதை வைத்து உண்பதற்காக அல்ல. நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி ஏரிகளைப் பராமரிப்புச் செய்யாமல், மூன்று போகமும் விளைந்த நிலங்களை ஒரு போகம் கூட விளைவிக்க முடியாத நிலங்களாக மாற்றி அதில் மூன்று போகமும் பயிர் செய்து நிலத்தையே வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இல்லாத நஞ்சை நிலங்களைக் காண்போம் என்று ஒரு பிரிவினரும், அரசு இயக்கமோ, கொஞ்சமுள்ள நஞ்சையையும் விட்டுவைக்கப் போவதில்லை என்ற போராட்டமும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆதலால் புதுச்சேரியில் உள்ள நஞ்சை நிலங்களைக் கீழ்க்கண்ட சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது எமது கருத்து.

அது பின்வருமாறு :

1. நஞ்சை நிலங்கள் ஏரித்தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வேளாண்மை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.


2. தண்ணீர் மட்டம் 50 அடிக்கு மேலே உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை ஒரு போக வேளாண்மைக்கு மட்டும் அனுமதிக்கலாம்.


3. 50 அடிக்குக் கீழே தண்ணீர் மட்டம் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளை, கரும்பு, வாழை, நெல் நீங்கலாக மிகத் தண்ணீர் குறைவாகச் செலவாகும் இதர வேளாண்மைப் பயிர் செய்ய அனுமதிக்கலாம்.


4. புதுவையில் வேளாண்மை இடங்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகின்றன. வேளாண்மைத்தினக் கூலித் தொழிலாளிகளைப் பற்றி எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உண்மையில் நஞ்செய் நிலங்களுக்கு உண்மைச் சொந்தக்காரர் அவர்களே. மிகுந்த துயரத்தில் உள்ள அவர்களுக்கு வேளாண்மை இடங்கள் கைமாறும் பொழுது நிலப்பதிவின் போது நிர்ணயம் செய்த ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து உடனடியாக, சுனாமி நிவாரண நிதிபோன்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


5. தற்போது உள்e நஞ்சை நிலங்களை விட இந்தப் பூமிக்குத் தேவையானது இயற்கைக் காடுகளே. புதிய நீர் நிலைகளே; ஆதலால் விவசாயிகள் நியாயமான விரும்பும் விலையைக் கொடுத்து நகர்புறத்தைச் சுற்றியுள்ள வேளாண்மை இடங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாங்கி அவற்றில் புதிய நீர்நிலைகளை உருவாக்குவதிலும், இயற்கைகாடுகள் உருவாக்குவதிலும் மட்டுமே செய்யப்படுத்தப்பட வேண்டும்.


6. "தற்போது உள்ள நாட்டின் நிலைமைக்கு இது இன்றியமையாதது. எந்தவிதமான பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் எழுதப்படும் இந்த மடலை நன்கு அறிந்து செயல்படுத்த முயற்சிக்கவும். இந்த மடலைச் சமர்ப்பிக்கும். தி.ப. சாந்தசீலன் ஆகிய யாம் உங்கள் நண்பன், உங்கள் அன்பன் என்பதை நன்கு தெரிந்து கொள்ளவும்''.


7. உழவர்களுக்கு : உழவர்கள் என்பது சிறு விவசாயிகளைக் குறிக்கும். உழவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குரிய சந்தை விலை உலக சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். உதாரணமாக இங்கே ரூ.10/- முதல் ரூ. 20/- வரை விற்கப்படும் அரிசி வெளிநாடுகளில் ரூ.50/- முதல் ரூ.200/- வரை விற்கப்படுகிறது.


அரும்பொருட்களான அதாவது உலகமக்களுக்குத் தேவைப்படும் அறியபொருட்களான வெண்டை, புடலை, மாதுளம், இளநீர் போன்ற பொருட்கள் உலக சந்தையை விட, பத்து முதல் இருபது மடங்கு குறைவாக விற்கப்படுகின்றன. இதை மாற்றி உலகளவில் நல்லவிலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். அதே சமயத்தில் தற்போதுள்ள நிலையில் நம் நாட்டில் வேளாண்விளைப் பொருட்களின் விலை உயர்வால் உள்நாட்டு மக்கள் பாதிக்கப்படாதவாறு வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நாட்டிவ் உள்ள இதர வறியவர்களுக்கும் நுகர்வுத் தன்மை பாதிக்கப்படாத வகையில் வேண்டிய ஏற்பாடுகள் இலவச உதவிகள் மூலமோ மற்றவழி வகைகள் மூலமோ செய்யப்பட வேண்டும்.


பொதுவாக உள்நாட்டு வேளாண் உற்பத்திப் பொருட்கள் உலக சந்தையில் நல்ல அளவிற்கு விற்கப்பட்டால் ஒழிய வேளாண்மையில் வெற்றி காண்பது கடினமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னும், தற்போதும் வேளாண் விளைபொருட்களுக்கு (தக்காளி, வாழைக்காய்) சந்தை விலை மிகமிகக் குறைவாக இருந்ததால் லோடு கணக்கில் தக்காளியையும் வாழையையும் விவசாயிகள் சாலையில் வீசி விட்டுச் சென்றார்கள். கோவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொழுதும் சாலையில் வீசாமல் வயிற்றெரிச்சலோடு வேளாண்மை விற்பனைப் பொருட்களை மிகமிகக் குறைந்த விலையில், வேறுவழி இல்லாமல் விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


8. எவ்வளவு நீர்வளம் இருந்தாலும் காவிரியில் 365 நாட்களும் 24 மணிநேரமும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தாலும் எவ்வளவு உதவிகளை அரச் செய்தாலும் ஆட்சியாளர்கள் அதற்கு ஏற்பாடுகள் செய்தாலும் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய சந்தைவிலை கிடைக்கவில்லையென்றால் எல்லோருடைய முயற்சியும் பாழாகி வேளாண்மை மீள முடியாத துயரில் இருப்பது மட்டுமே மிஞ்சும்.


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கடலில் கிடைக்கும். பெரிய இறால் தற்போது விற்கப்படும் சாதாரண மீன்கள் விலையை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் தற்போது சாதாரண மீன்கள் விலையை விட மிக அதிக விலை பெரிய இறால்களுக்குக் கிடைக்கிறது.


முந்திரி விவசாயியின் நிலைமையும் இதேதான் சுமார் 40 வருடங்களுக்கு முன் முந்திரி விளைந்ததே தவிர வேளாண்மை செய்யப்படவில்லை. முந்திரி விவசாயிகள் அதை விற்பனை செய்வதற்கு வசதி படைத்தவர்களின் வீடுகளின் முன் பிச்சைக் காரர்களைப்போல யாசித்து, கெஞ்சி முந்திரிப் பயிர்களை விற்பனை செய்வார்கள். அவர்களின் நிலைமையும் மிகுந்த வறுமை நிலையில் இருக்கும்.

முந்திரியின் அருமை உலக அளவில் உணரப்பட்டு அது ஏற்றுமதி ஆன பிறகுதான் முந்திரி விளைச்சல் வேளாண்மையாக மாறி, அதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். அதே போல் வாழை, இளநீர், பனைநுங்கு, பனங்கிழங்கு, முருங்கைப்பூ, அத்திக்காய், அத்திமது, பனைமது, இவற்றின் அருமைகளை உலகளவில் உணரச் செய்து நம்நாட்டின் நாணய மதிப்பை வியக்கத்தகு வகையில் உயர்த்தலாம்.


9. நம் நாட்டிற்கு உள்ள மிக முக்கியமான பிரச்சனையே இதுதான். வேளாண்மையிலும் பால் உற்பத்தியிலும் நம் மரபுவழிப்படி வெற்றி காண்பது எப்படி என்பதைப் பற்றிய பலதுறைகளைச் சார்ந்த வல்லுநர்களை ஒன்று கூட்டி அழைத்துக் கலந்து ஆலோசனை செய்து முடிவுசெய்ய வேண்டும்.


10. கல்வி, மருத்துவம், வணிகமயமாக்கப்படாமல் சேவை அடிப்படையில் இருக்க வேண்டும். நீதி எளிய முறையில் கிடைக்க வேண்டும் இப்படி இருந்தால்தான் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கிவரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். முறையற்ற குடியிருப்புப் பகுதிகள் நகர்ப்புறங்களில் இல்லாமல் போகும். மிகச்சரியான புள்ளி விவரத்தோடு நிலங்களை ஆராய்ந்தாலும் அல்லது ஆகாய விமானத்தில் சென்று தமிழகம், புதுவை என்று பாகுபாடு இல்லாமல் பார்த்தாலும் புதுவையைச் சுற்றியுள்ள நகர்ப்புற வளர்ச்சி மிகமிகக் குறைவு என்பதும், வேளாண்மை இடங்களும் காடுகளும், ஏரிகளும் மிக, மிகஅதிகம் என்பதும் வெகுவாகப் புலப்படும்.


ஆகவே நாம் ஆற்ற வேண்டிய கடமை நிலப்பரப்பில் மிக உன்னதமானதாகும். அதாவது புதுவை மாநிலத்தை ஒட்டியது போல் உள்e நிலப்பரப்பைத் தத்து எடுத்து அல்லது புதுவையுடன் சேர்த்து (அ) நீண்டகால குத்தகை எடுத்து வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கி இர்ரி, அம்பா சமுத்திரம், ஆடுதுறை, பெரியகுளம், வேப்பங்குளம், காசரக்கோடு போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் தன்னலமற்ற சேவையை உலகத்திற்கு அர்ப்பணித்து வருவது போல் புதுவையிலும் நிகழ ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆகவே புதுவையின் அரசியல் அன்பர்கள் கிராமப்புற வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். கிராமங்களில் மிகச் சுலபமாகவும் சுகமாகவும் மக்கள் வசிக்கக் கூடிய நிலையை உருவாக்குவதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நகர்ப்புற நெரிசல் குறையும்.

மேலும் வாழை, தென்னை, பழவகைகள், தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்குத் தனித்தனியே ஆராய்ச்சி நிலையங்கள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இந்த ஆராய்ச்சி நிலையங்கள் மரபுவழி வழிமுறையை பின்பற்றி உருவாக்கப்பட வேண்டும். இத்துடன் இந்த மடலை நிறைவு செய்கிறோம்.

0 மறுமொழிகள்: